பல்வேறு வகை வாவிகள்

1670. சாந்துநீர் நிறைந்த வாவி
     1தயங்குசெங் குவளை வாவி
பூந்துக ளவிழ்ந்த பொற்றா
     மரைமலர் புதைந்த வாவி
தேந்துண ரகன்ற தெண்ணீர்த்
     திருமணி யுருவ வாவி
2வாய்ந்தன காட்டிக் காட்டி
     யுழையவர் வணங்கி நின்றார்.
     (இ - ள்.) சாந்துநீர் நிறைந்த வாவி - சந்தனங்கலந்த மணநீர் நிறைந்த
குளங்களையும், தயங்கு செங்குவளை வாவி - விளங்குகின்ற செங்கழுநீர் மலர்ந்துள்ள
நன்னீர்க் குளங்களையும், பூந்துகள் அவிழ்ந்த பொன் தாமரைமலர் புதைந்த வாவி -
மகரந்தப் பொடியை மிக்குதிர்க்கும் பொன்னிறத் தாமரை மலர்ந்து நீரை மறைத்துள்ள
குளங்களையும், தேந்துணர் அகன்ற தெண்ணீர் திருமணி உருவ வாவி - இனிய மலர்
யாதும் இல்லாதனவாய் நீலமணிபோன்ற நிறமுடைய தெளிந்த நீர் மாத்திரையே நிறைந்த
குளங்களையும், வாய்ந்தன - ஆண்டுள்ளவற்றை, காட்டிக் காட்டி - அரசன் முதலியோர்க்கு
ஒவ்வொன்றாய்க் காட்டுவாராகி, உழையவர் - பணியாளர், வணங்கி நின்றார் -
அவர்களைத் தொழுது நின்றனர், (எ - று.)

     வாவிக் கரையை அடைந்த நம்பிக்கு நீர்நிறைந்த வாவியையும், குவளை வாவியையும்,
பொற்றாமரை வாவிவையும், தெண்ணீர் வாவியையும், உழையர் காட்டிக் காட்டி வணங்கி
நின்றார் என்க.

(540)