1677. காரையார் வண்ணன் மாலைக்
     காற்படை யுடைந்த போழ்தில்
தேரையாய்க் குறளுஞ் சிந்து
     மிதந்தன 1சில்ல சிந்தி
வேரியார் குவளை வேய்ந்த
     மெல்லிய லவர்க்குத் தோற்ற
ஓரையாய் முதலை யாகிக்
     2கூன்படை யொளித்த வன்றே.
     (இ - ள்.) காரை ஆர்வண்ணன் - முகிலைப்போன்ற வண்ணமுடைய திவிட்டநம்பி,
மாலை கால்படை - நிரலுடைய காலாட்படைகள், உடைந்த போழ்தில் - தோல்வி
எய்தியவுடனே, சில்ல குறளும் சிந்தும் - சிற்சில குறளர்களும் சிந்தர்களும், தேரையாய்
சிந்தி மிதந்தன - தவளைகளைப் போன்று நீரிலே சிதறி மிதக்கலாயினர், ஓரையாய் -
கூட்டமாகிய, வேரியார் - மணம் பொருந்திய, குவளை வேய்ந்த - நீலோற் பல மலர்
சூடிய, மெல்லியல் அவர்க்கு - தேவிமார்களுக்கு, தோற்ற - தோல்வியுற்ற, கூன்படை -
கூனராகிய படை, ஓரையாய் முதலையாகி ஒளித்த அன்றே - ஓரைகளைப் போன்றும்
முதலைகளைப் போன்றும் நீரிலே மூழ்கி மறைந்து கொண்டனர், (எ - று.)

     ஓரை - ஒருவகைக் கடல்மீன்.

     குறள் சிந்து கூன் முதலிய உருவமுடையோர், உரிமை மகளிர்க்கு ஏவல் செய்யும்
பொருட்டு உளராவர். அவர் இந்நீர் (போரில்) விளையாட்டில், நம்பியின் படைஞராய்
உருவகித்துக் கூறப்பட்டனர். குறளர் சிந்தர் ஆகியோர் தவளைகளைப் போன்று நீரில்
மிதந்தும், கூனர் முதலையைப் போன்றும் ஓரையைப் போன்றும் நீருள் மூழ்கியும்,
விளையாடினர் என்பது கருத்து.

(547)