1678. வென்றனம் வீரன் றன்னை
     வீக்குமின் சிவிறித் தாரை
சென்றெனச் சிறந்த காதற்
     றேவியர் திளைக்கும் போழ்தில்
ஒன்றிய வுழையர் கீழ்நீ
     3ரோப்பறித் திடுத லோடு
நின்றகஞ் சுழிந்த தெண்ணீர்
     நெரேலென விழிந்த தன்றே.
     (இ - ள்.) வென்றனம் வீரன்றன்னை - வீரனாகிய நம்பியை யாம் வென்றுவிட்டேம்,
வீக்குமின் சிவிறித்தாரை சென்று என - விடாதே துருத்தி நீர்த்தாரையை வீசுங்கோள்
அணுகி நின்று என்று, சிறந்த காதல் தேவியர் - சிறந்த தலையன்புடைய தேவிமார்கள்,
திளைக்கும் போழ்தில் - திவிட்ட நம்பியை நெருக்கிய அமயத்தே, ஒன்றிய உழையர் -
நம்பியின் ஏவலிலே பொருந்திய பணியாளர், கீழ்நீர் ஓ பறித்திடுதலோடும் - அவ்வாவியின்
கீழே உள்ள நீரை மதகின் பலகையை அகற்றி ஓடிவிடும்படி செய்தனராக அங்ஙனம்
செய்தவுடனே, நின்று அகம் சுழிந்த தெண்ணீர் - அவ்வாவியில் நிலைத்து நின்று உள்ளே
சுழித்திட்ட தெளிந்த நீர், நெரேல் என - பொள்ளென, இழிந்தது - வடிந்தொழிந்தது,
அன்று, ஏ : அசைகள், (எ - று.)

     ஓ - ஓரெழுத் தொருமொழி - மதகிலிட்டு நீரைத் தேக்குதற்குரிய பலகையின் பெயர்.
பறித்தல் - உருவி எடுத்தல் - நீரைத்தேக்கும் போது செருகியும் வடியச் செய்யும்பொழுது
உருவியும் விடுதல் வழக்கம். ஆகலின், ஓப்பறித்திடுதலோடும் என்றார். நெரேல், என்பது
ஈண்டு விரைவு குறித்து வந்தவொரு குறிப்புச் சொல்.

       (548)