வேறு அரசனைப் பொழில் வரவேற்றல் | 169. | கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித் தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற் றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே. | (இ - ள்.) கோமான் சென்று அணைதலுமே - சுவலனசடி யரசன் அப்பொழிலைச் சென்று சேர்ந்த அளவிலே; அச்சோலையில் உள்ள; தேமா - தேமாமரங்கள்: கொங்கு அணிந்த மலர் தூவி நின்று எதிர்கொள்ள - மணம் பொருந்திய மலர்களைத் தூவிநின்று அரசனை வரவேற்க; சிறுகுயில் போற்று இசைத்தன - சிறிய வடிவமுடைய குயில்கள் அரசனுக்கு வாழ்த்துக் கூறின; வாம் மான் தேர் மன்னற்கு - தாவிப்பாய்ந்து ஓடுகின்ற குதிரைகளைப் பூட்டிய தேரையுடைய அரசனுக்கு; மங்கலஞ் சொல் மகளிரைப்போல் - மங்கல வாழ்த்துப் பாடல் பாடுகின்ற பெண்களைப்போல; தூ மாண்ட இளங்கொடி - தூய்மையிற் சிறந்த இளமைமிக்க பூங்கொடிகள்; தம் தளிர்க்கையால் தொழுதன - தம்முடைய தளிர்களாகிய கைகளால் வணக்கஞ் செய்தன. (எ - று.) அரசன் சென்று பொழிலைச் சேரும்போது கால நிலைமைக்கு ஏற்பப் பொழில்களில் மாமரங்கள் மணம் பொருந்திய மலர்களைச் சொரிதலை, அவ்வரசனை மலர்தூவி வரவேற்பதாகவும், சிறு குயில்கள் கூவுதலை அவ்வரசனுக்கு வாழ்த்துக் கூறுவதாகவும், இளங்கொடிகள் குவிந்த தளிர்களைக் கொண்டிருத்தலை அவ்வரசனுக்கு மங்கல வாழ்த்துப் பாடல் பாடும் மாதர்கள் கைகூப்புவதாகவும் கற்பித்தார். கொடிகள், மெல்லியவாய் ஒல்கி யொசியும் வடிவினால் மகளிரைப் போலும். கொடிகளில் வண்டுகள் ஒலித்தலை வாழ்த்தொலியாகக் கொள்க. கோமான் - மான் பெயர் விகுதி. தேமா - இனிமையான (தேன் போன்ற) பழங்களைக்கொண்ட மாமரம். | ( 51 ) | | |
|
|