திவிட்டன் சடியின் நலம் வினாதல்

1695. வந்தவன் வணங்க லோடு
     மாமனை 1நுதலி யென்னை
கந்தணை யானை வேந்தன்
     கழலடி செவ்வி யோவென்
றந்தமி லாழி யாள்வான்
     வினவலி னருளு மாறென்
றிந்திர னனைய நீராற்
     கிறைஞ்சலு மிருக்க வென்றான்.
     (இ - ள்.) வந்தவன் வணங்கலோடும் - அவ்வாறு வந்த விச்சாதரன்
வணங்கியவுடனே, மாமனை நுதலி - தன் மாமனாகிய சுவலனசடி மன்னனை நினைவு
கூர்ந்தவனாய், என்னை, கந்து அணையானை வேந்தன் கழல்அடி செவ்வியோ என்று -
தூதனே! தூணில் கட்டப்படும் அரசுவாவினையுடைய சடிமன்னருடைய வீரக்கழலணிந்த
திருவடிகள் வலியவோ? என்று, அந்தமில் ஆழி ஆள்வான் வினவலின் - அழிவற்ற
சக்கரப்படையை உடைய நம்பி வினவினனாக, அருளுமாறு என்று - அத்தூதனும், “அடிகள்
விரும்பியருளிய படியே“ என்று கூறி,

     இந்திரன் அனைய நீராற்கு - தேவர்கோமானை ஒத்த மாண்புடைய திவிட்டநம்பியை,
இறைஞ்சலும் - வணங்கியவுடன், இருக்க என்றான் - தூதனே அமர்க என்று உபசரித்தான், (எ - று.)

என்னை - என்றது, ஒருவரோடு சொல்லாட்டம் தொடங்குவார் அவரை
முன்னிலையாக்கும் பொருட்டு முன்னர்த் தொடங்கும் ஒரு சொல். என் + ஐ - என்
தலைவனாகிய எனினுமாம்.

     வந்து வணங்கிய விச்சாதரனை நோக்கி, மாமனாகிய சடியரசனின் நலத்தை வினாவ,
அவனும் அடிகள் விரும்பியவாறே என்று வணங்க, அமர்க என்று நம்பி கூறினான், என்க.

(565)