குறிஞ்சி நிலம்

17. கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை
மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்
மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்
நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.
     (இ - ள்.) காந்தளும் கைவிரிந்தன - செங்காந்தள் மலர்கள் மங்கையர்களுடைய
கைகளைப்போல மலர்ந்தன; பூஞ்சுனை நீலமும் மைவிரிந்தன - அழகிய
சுனையிடத்தனவாகிய நீல மலர்களும் மைபரவினாற் போல மலர்ந்தன; வேங்கையும் -
வேங்கை மரங்களும்; வான்செய் நாள்மெய் விரிந்தன - சிறப்பைத் தரும் நன்னாளிலே
தம்மெய் நிரம்ப மலர்ந்தன; சோர்ந்ததேன் நெய் - இம்மலர்கள் ஒழுகவிட்டதேனாகிய
நெய்; நீள் இரும் குன்று எலாம் நீண்ட-பெரிய குன்றுகளிலெல்லாம்; விரிந்தன-பரவின. சோர்ந்ததேன்; இறாலில் நின்றும் ஒழுகியதேனுமாம். குறிஞ்சிக்குப் பூக் காந்தளும்,
வேங்கையும், சுனைக்குவளையுமாம். காந்தள் மலரை மகளிர் கைக்கு உவமையாகக் கூறுவர்.


     “பன்னாளும் நின்ற விடத்தும் கணிவேங்கை, நன்னாளே நாடிமலர் தலால்“ வேங்கை
வான்செய் நாண் மெய்விரிந்தன என்றார். இனி-வான்மீனின் உருவமுடைய மலர்களை
மலர்ந்தன எனினுமாம். தேனெய்-இருபெயரொட்டு. இனிக் கைவிரிந்தன முதலியவற்றைக்
காந்தள் முதலியவற்றிற்கு அடை மாத்திரையாகக்கொண்டு காந்தள் முதலியன சோர்ந்ததேன்
குன்றெலாம் விரிந்தன என ஒரு தொடராக்கினுமாம்.

( 17 )