மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடைபிடித்தல்

170. கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
வடிவாசப் பொடியாக 1வனவல்லி சொரிந்தனவே
புடைவாசங் கொள 2மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
3குடைமாக மெனவேந்திக் 4கோங்கம்போ தவிழ்ந்தனவே.
 

     (இ - ள்.) வனவல்லி - அந்தப் பூம்பொழிலில் உள்ள பூங்கொடிகள்; கடிவாசம்
மலர்விண்ட கமழ்தாது - புதுமையான மணத்தினையுடைய மலர்களினின்றும்
வெளிப்படுகின்ற மணம் வீசும் மகரந்தப் பொடிகளை; கழல் அவற்கு - மறக்கழலை யணிந்த
சுவலனசடி மன்னனுக்கு; வடிவாசப் பொடியாகச் சொரிந்தன - சிறந்த மணப்பொடியாக
இறைத்தலைச் செய்தன; மாலம் - குங்கும மரங்கள்; புடைவாசம் கொள - மருங்கிலே மணங் கொள்ளுமாறு; பூங்கவரி எடுத்தெறிய - தமது மலர்களாகிய சாமரங்களை
யெடுத்துவீச; கோங்கம் - கோங்கமரங்கள்; மா கம் குடை ஏந்தி என - பெரியவிண்ணி
லளாவுகின்ற கடைகளை உயர எடுத்தாற்போல; போது அவிழ்ந்தன - தமது மலர்கள்
விரியப்பெற்றன. (எ - று.)

     அரசன் வருகையில் அப்பொழிலில் கொடிகள் தம் பூந்தாதுகளைச் சொரிதலை,
அவ்வரசன்மீது மகரந்தப்பொடி தூவிப் போற்றுவதாகவும், குங்கும மரங்கள் பூத்திருத்தலை
அவ்வரசனுக்குக் குடை பிடிப்பதாகவும் கற்பித்தார். சாமரத்தோடு குங்கும மலரும்
குடையோடு கோங்க மலரும் வடிவிலொக்கும். வனமல்லி என்னும் பாடத்திற்குக் காட்டு
மல்லிகை என்று பொருள் கொள்க. “கோங்கு பொற் குடை கொண்டு கவித்தன“ என்றார்,
யசோதர காவியத்தில்.

( 52 )