lதிங்கள் மறைதலும் ஞாயிறு தோன்றுதலும் | 1709. | கங்குல்வாய் மடந்தை கண்ட கனவுமெய் யாகல் வேண்டி மங்குல்வா னகட்டுச் சென்று மதியவன் மறைந்த பின்னை அங்குலா யிருளை நீக்கு 1மாயிரங் கதிரி னானும் கொங்குலாங் குழலி காணுங் குழவிய துருவங் கொண்டான். | (இ - ள்.) கங்குல்வாய் மடந்தை கண்ட - அவ்விரவிலே கோப்பெருந் தேவி கண்ட, கனவு மெய்யாகல் வேண்டி - கனா நனவாகும் பொருட்டு, மங்குல்வான் அகட்டுச் சென்று - இருண்ட விசும்பின் நடுவே போய், மதியவன் மறைந்த பின்னை - திங்கள் மறைந்த பின்னர், அங்கு உலாம் இருளை நீக்கும் - அவ்விசும்பிடத்தே பரவிய இருளை அகற்றா நின்ற, ஆயிரம் கதிரினானும் - ஆயிரம் சுடர்களையுடைய ஞாயிறும், கொங்கு உலாம் குழலி காணும் குழவியது - மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய தேவி கனவுகண்டதின் பயனாய் இனித் தோன்ற நிற்கும், மகவினுடைய, உருவம் கொண்டான் - உருவத்தைத் தேவிக்குக் காட்டுவான் போன்று எழில் மிக்க வடிவுடன் தோன்றுவானாயினன், (எ - று.) நங்கை கண்ட கனாவை உண்மையே ஆக்குவான் போன்று திங்கள் மறைந்துவிட நங்கையின் வயிற்றிற் பட்ட மகவின் எழில் இற்றெனக் காட்டுவான் போன்று ஞாயிறு தோன்றினன் என்க. | (579) | | |
|
|