(இ - ள்.) அணிவண்டு - அழகிய வண்டுகள்; கொடி ஆடும் நெடுநகரக் கோமான்தன் குணம் பரவி அடிபாடும் அவர்கள் என - கொடிகள் அசையப்பெற்ற பெரிய இரதநூபுர நகரத்தின் அரசனான சுவலனசடியினது குணங்களைப் போற்றி அவனுடைய அடிகளைப் பாடுபவர்களைப்போல; முரன்றன - ஒலித்தன; கொடுவாய கிளி - வளைந்தவாயையுடைய கிளிகள்; வடிவாய வேலவற்கு மலர்ச் சின்னஞ் சொரிவனபோல் - வடித்த வாயினையுடைய வேற்படையையுடைய அரசனுக்கு விடுபூக்களைச் சொரிபவைபோல; குளிர் நறும் போது கோதி உகுத்தன - தண்ணிய நறுமணமுள்ளமலர்களைக் கொத்திச் சிந்தின. (எ - று.) அவ்வரசன் வருகின்ற சமயத்தில் அப்பொழிலில் வண்டுகள் ரீங்காரஞ் செய்தலை, அவ்வரசன் குணங்களைப் புகழ்ந்து பாடுவதாகவும், கிளிகள் மலர்களை வாயலகாற்கோதி உதிர்த்தலை அவ்வரசன் மீது விடுபூச் சிந்துவதாகவும் கற்பித்தார். விடுபூ - மாலையாகத் தொடுக்கப்படாத தனிப்பூ. கொடிவாய என்னும் பாடத்திற்குச் சிறிய வாயினையுடைய என்று பொருள் கொள்க. கொடி - சிறுமை. |