சுயம்பிரபை கருவுயிர்த்தல்

1712. கோணலம் பொலிந்துவிண் குளிரக் குங்குமத்
தோணலம் பொலிந்ததோர் தோன்ற லோடுதன்
கேணலம் பொலிதரக் கிளருஞ் சோதிய
நாணலம் பொலிதர நம்பி தோன்றினான்.
     (இ - ள்.) கோள் நலம் பொலிந்து - ஞாயிறே முதலிய கோள்கள் நன்னிலையிலே
நின்று விளங்கவும், விண் குளிர - வானவர் மகிழவும், கிளரும் சோதி அம் நாள் நலம்
பொலிதர - திகழாநின்ற சோதி என்னும் அழகிய விண்மீனுக்குரிய நன்மை சிறப்புற் றமையா
நிற்பவும், குங்குமத்தோள் நலம் பொலிந்தது ஓர் - குங்குமச் சாந்தணிந்த தோளினது
நன்மையாகிய பேராற்றலாலே திகழ்வதொரு, தோன்றலோடு - திவிட்ட நம்பியோடு, தன்
கேள் நலம் பொலிதர - தன்னுடைய பிற கேளிர்களும் நன்மையாலே விளங்கா நிற்பவும்,
நம்பி தோன்றினான் - மகன் பிறந்தனன், (எ - று.)

     ஞாயிறே முதலிய கோள்கள் தாம் நிற்கும் இடங்களால் நன்மை மிகுவனவாக
விண்குளிரச் சோதி மீனுக்குரிய நாளிலே, திவிட்டனோடு தன் சுற்றத்தாரும்
நன்மையடையும்படி நம்பி தோன்றினான் என்க.

     நம்பி ஈண்டு ஆண்மகவு என்னு மாத்திரையாய் நின்றது.

(582)