அப்பொழுது நிகழ்ந்த ஆரவாரம்

1713. பொலிகெனு மொலிகளும் பொன்செய் மாமணி
ஒலிகல வொலிகளும் விரவி யூழிநீர்
கலிகெழு கனைகடல் கலங்கி யன்னதோர்
பலிகெழு முரசொலி பரந்தொ லித்ததே.
     (இ - ள்.) ஊழி கலிகெழு கனை நீர் கடல் - இறுதிக்காலத்தே முழக்க மிக்கு
ஆரவாரிக்கின்ற நீர் மிக்க கடல், கலங்கியன்னதோர் - பொங்கிக் கலங்கினாற்
போன்றதொரு, பலிகெழு முரசொலி - வழிபாடு கொள்கின்ற மங்கல முரசங்களின் பேரொலி,
பொலிகெனும் ஒலிகளும் - “நம்பி நீடூழி வாழ்க“ என்னும் வாழ்த்தொலியும், பொன் செய்
மாமணி ஒலிகல வொலிகளும் - பொன்னாலியன்ற சிறந்த மணிகள் அழுத்தப்பெற்ற
ஒலிக்கும் மரபினையுடைய நூபுரம் முதலிய அணிகலன்களின் ஒலியும், விரவி - கலந்து,
பரந்து - நகர் முழுதும் பரவா நின்று, ஒலித்ததே - முழங்கிற்று, ஏ : அசை, (எ - று.)

முரசொலி, ஒலிகளும், ஒலிகளும், விரவி ஒலித்ததென்று இயைத்துக் கொள்க. முரசொலி : எழுவாய்.

     நம்பி பிறந்தான் பொலிக நங்கிளை எனப் பிறரும் கூறுதல் காண்க.

     பொலிக என்னும் வாழ்த்தொலிகளும் கலவொலிகளும் விரவி முரசொலி பரந்து
ஒலித்த வென்க.

(583)