lஇதுவுமது

1714. துளைபடு குழலிசை துடியொ டார்ப்பவும்
வளைபடு கறங்கிசை வயிரொ டேங்கவும்
தளைபடு தகைமலர் மாலை தாதுகக்
கிளைபடு வளநகர் கிலுகி லுத்ததே.
     (இ - ள்.) துளைபடு குழல் இசை - தொளைக்கப்படுகின்ற வேய்ங்குழலின் இன்னிசை,
துடியொடு - துடி என்னும் தோற் கரவி இசையோடே கலந்து, ஆர்ப்பவும், முழங்குதலாலும்,
வளைபடு கறங்கு இசை - சங்குகள் தோற்றிய பேரொலி, வயிரொடு ஏங்கவும் -
கொம்புகளின் ஓசை யோடே கலந்து முழங்குதலாலும், தளைபடு தகை மலர் மாலை தாது
உக - பிணைக்கப்படுகின்ற சிறப்புடைய மலராலாய மாலைகள் பூந்துகளை உதிர்க் கவும்,
கிளைபடு வளநகர் - பல்வேறு கூறுபாடுகளையுடைய வளப்பம் மிக்க அப்போதனமா நகரம்,
கிலுகிலுத்ததே-கிலுகிலுத்துக் கிடப்ப தாயிற்று, (எ- று.)

     கிலு கிலுத்தல் - இடையறாது மிக் கொலித்தல் : உலக வழக்கு.

     குழலிசை துடியோடே முழங்கவும் சங்கொலி கொம்போடே முழங்கவும் மாலை
தாதுகவும் வளநகர் கிலுகிலுத்த தென்க.

     மாலை தாதுக என்றது மக்கள் மகிழ்ச்சிமிக்கு நெருங்கி வருதலால் நிகழ்ந்த தென்க.

(584)