இதுவுமது

1715.

தொத்திளங் கடிமலர் துதைந்த கோதையார்
மொய்த்திளங் குமரரோ டாடு முன்கடை
மத்தளப் பாணியு மதன கீதமும்
கைத்தலத் தாளமுங் கலந்தி சைத்தவே.
       (இ - ள்.) தொத்து இளம் கடிமலர் துதைந்த கோதையார் - கொத்தாகிய
இளமையுடைய மணமிக்க மலர்கள் செறிந்த மாலையை அணிந்த விறலியர்,

     இளங்குமரரோடு - இளமையுடைய கூத்தரோடே, மொய்த்து - நெருங்கி, ஆடும்
முன்கடை - கூத்தாடாநின்ற தலைவாயிலின் கண், மத்தளப்பாணியும் - முழவினது
இன்னிசையும்,

மதன கீதமும் - காமச்சுவை கவினிய இயைப் பாடலும், கைத்தலத் தாளமும் - கைகளாலே
ஒற்றும் தாள ஓசையும், கலந்து இசைத்தவே - கூடி முழங்கின, (எ - று.)

     நம்பி பிறந்தமை கருதி மகிழ்ந்த நகரத்தே விறலியரும் கூத்தரும் ஆடுதலாலே
மத்தள முழக்கமும் காமப்பாடலும் கைத்தலத்தாளமும் கலந்து இசைத்த என்க.

(585)