இதுவுமது

1716. சிறைநகர் சீத்தன திலத முக்குடை
இறைநகர் விழவணி யியன்ற 1நீண்டு நீர்த்
துறைநகர் சுண்ணநெய் நாவி தூங்கின
நிறைநக ரவர்தொழி னினைப்பி கந்தவே.
     (இ - ள்.) நகர்சிறை சீத்தன - அப் போதனநகரத்தே உள்ள சிறைகளிலுள்ள
குற்றவாளிகள் வீடு செய்யப்பட்டனர், திலதம் முக்குடை இறைநகர் - மேன்மை மிக்க
மூன்று குடைகள் நிழற்றா நின்ற அருகக் கடவுளின் திருக்கோயில்களிலே, விழவணி
இயன்ற - விழாக்களாகிய அழகிய செயல்கள் நிகழ்த்தப்பட்டன, நீண்டு நீர்த்துறை நகர் -
நீண்ட நீர்த்துறைகளி டத்துள்ள மண்டபங்களிலே, சுண்ணம் நெய்நாவி தூங்கின -
மணப்பொடியும் நறு நெய்யும் கத்தூரியும் மிக்கு வழங்கப்பட்டும் எஞ்சிக்கிடந்தன, நிறை
நகரவர் தொழில் - இம்மகப்பேற்றாலே மகிழ்ச்சியுற்ற அச்செல்வம் நிறைந்த போதன
நகரத்தே வாழும் மாந்தர்கள் செய்யும் அறச்செயல், நினைப்பு இகந்த - நினைந்து
கூறுதற்கியலாது மிக்கன, ஏ : அசை, (எ - று.)

     நீண்டு - நீண்ட. சிறை : ஆகுபெயர், நீர்த்துறைநகர் - நீர்த்துறைக் கண்ணுள்ள
மண்டபம்.

     அப்பொழுது சிறைப்பட்டோர் வீடு செய்யப்பட்டனர்; கோயில்களிலே விழா
நிகழ்த்தப்பட்டன; நீர்த்துறைகளிலே எண்ணெயும் சுண்ணமும் வழங்கி எஞ்சின;
அந்நகரத்தார் செய்த அறச்செயல்கள் அளவிறந்தவாயின என்க.

(586)