அம்மகவிற்கு வாலாமை கழித்து இறைவன் திருவடிச் சேடம் புனைதல் | 1717. | சுண்ணநெய் யெழுபக லாடித் தொன்னகர் நண்ணிய நானநீ ராடி நம்பியைப் புண்ணியா 1வாசனஞ் செய்து புங்கவன் திண்ணிய வடிமலர்ச் சேடஞ் சேர்த்தினார். | (இ - ள்.) தொல்நகர் - பழைதாகிய அப்போதனமா நகரத்தே, எழுபகல் - நம்பி பிறந்தநாள் தொடங்கி ஏழுநாளளவும், சுண்ணம் நெய் ஆடி - சுண்ணம் நெய் ஆடுதலாகிய சடங்கினை இயற்றி, நண்ணிய நானநீர் ஆடி - எழுநாளின் பின் பொருந்திய நீராட்டம் செய்து, நம்பியை - அம்மகவினை, புண்ணியா வாசனம் செய்து - வாலாமை போக்கி, புங்கவன் - அருக பரமேட்டியின், திண்ணிய அடிமலர்ச் சேடம் சேர்த்தினார் - அழிவற்ற திருவடிச்சேடத்தையும் சூட்டினார், (எ - று.) புண்ணியாக வாசனம் - புண்ணியா வாசனம் என நின்றது, அது :- வாலாமை போக்குதல் என்னும் பொருட்டு. சேடம் - நிர்மாலியம். நம்பி பிறந்தநாள் தொடங்கி ஏழுநாள் காறும் சுண்ணம் நெய் ஆடிப் பின்னர் நீராடி வாலாமை போக்கி நம்பிக்குப் புங்கவன் திருவடிச் சேடம் சேர்த்தினார் என்க. | (587) | | |
|
|