1720.

அறத்தகை யந்தணர் குழுவு 1மாடல்வேன்
மறத்தகை மன்னர்தங் குழுவு மாநகர்த்
திறத்தகு முதியரு மீண்டிச் செல்வனைப்
2பொறுத்தனர் பொலிவுரை புடைபொ ழிந்ததே.
     (இ - ள்.) அறத்தகை அந்தணர் குழுவும் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை
பூண்டொழுகும் அறத்தகுதியுடைய அந்தணர் கூட்டமும், ஆடல்வேல் மறத்தகை மன்னர்
தம் குழுவும் - பகை வெல்லும் வேற்படையாலே சிறப்புற்ற மறத்தன்மையுடைய அரசர்
குழாமும், மாநகர் திறம்தகு முதியரும் - ஏனைய பெரிய நகரத்தே வாழ்கின்ற சான்றாண்மை
மிக்க பெரியோரும், ஈண்டி - எய்தி, செல்வனைப் பொறுத்தனர் - அம்மகவினை
ஏந்தியவராய், பொலிவுரை - வாழ்த்தா நின்ற மொழிகள், புடை பொழிந்ததே - பக்கத்தே
மழைபோன்று பொழிவுற்றது, (எ - று.)

பொலிவுரை - வாழ்த்துரை; பொலிக என்னும் வாழ்த்துரை என்றவாறு.

     அறவோராகிய அந்தணரும் மறமிக்க மன்னரும் பிறசான்றோரும் வந்து அக்குழவியை
ஏந்தினராய் வாழ்த்தும் ஒலிமிக்க தென்க.

(590)