விமானத்தின் வந்த விஞ்சைமாதர் நம்பிக்கு நெய்பெய்தல்

1726. பொலிகெனப் புரவலன் பொன்செய் நீண்முடி
மலிதரு நறுநெயம் மகளிர் பெய்தலுங்
கலிதரு கனைகட லன்ன காதலோ
டொலிதரு நகையொலி யுவந்தெ ழுந்ததே.
     (இ - ள்.) பொலிகென - வாழ்க என்று வாழ்த்தி, அம் மகளிர் அவ்விச்சாதர
மடந்தையர், புரவலன் - திவிட்டநம்பியினுடைய, பொன் செய் நீள் முடி -
பொன்னாலியன்ற நீண்ட முடியின்மிசை, மலிதரு நறுநெய் பெய்தலும் - மிக்க நறிய
நெய்யைப் பொழிந்தனராக, கலிதரு கனைகடலன்ன காதலோடு - முழங்குகின்ற பெரிய
கடல்போன்ற விருப்பத்துடனே, ஒலிதரு நகை ஒலி - முழங்காநின்ற உவகை ஆரவாரம்,
உவந்து எழுந்தது - மகிழ்ச்சியோடே மிக்கது, (எ - று.)

     வந்த விச்சாதர மகளிர் நம்பியின் முடியிலே நெற் பெய்தனர் என்க.

     மகப் பேற்றுச் செய்தியை அறிவிப்போர் நெய்யொடும் சுண்ணத்தோடும் செல்லலும்,
சென்று அறிவிக்க வேண்டியோர் தலையில் நெய் பெய்தலும் மரபு ஆகலின், நெய் பெய்த
அளவானே, நற்செய்தி என அறிந்து மகிழ்ந்தனர் என்க.
 (596)