தூதன் சோதிமாலைக்கு மகப் பிறந்தமை கூறல்

1728. எங்கள்கோ னெறிகதிர்ப் பெயர னீர்மலர்க்
கொங்குசே ரலங்கலான் குளிரத் தங்கினாள்
மங்குறோய் மணிவரை மன்னன் றன்மகள்
தொங்கல்சூழ் சுரிகுழற் சோதி மாலையே.
இதுமுதல் 9 செய்யுள் ஒரு தொடர்

      (இ - ள்.) மங்குல்தோய் மணிவரை மன்னன் தன் மகள் - முகில்கள் பொருந்திய
அழகிய வடமலையின்கண் உள்ள சுரேந்திரகாந்த நகரத்து அரசனுடைய மகளாகிய,
தொங்கல் சூழ் சுரிகுழல் சோதிமாலை - மலர்மாலைகள் சுற்றப்பட்ட சுரிந்த
கூந்தலையுடைய சோதிமாலை என்னும் அரசிளஞ் செல்வி, எங்கள் கோன் - எம்
அரசனாகிய, எறிகதிர்ப் பெயரன் - அருக்ககீர்த்தி என்னும், பெயரையுடைய கொங்குசேர்
அலங்கலான் - மணந் தங்கிய மலர் மாலையையுடையோன், குளிர - மனமகிழும்படி,
தங்கினாள் - அவனுடன் உறைந்தாளாக, (எ - று.)

     எம்மரசனாகிய அருக்ககீர்த்தி சுரேந்திரகாந்தத்து மன்னன் மகளாகிய சோதிமாலை
என்பாளாகிய தன் மனைவியோடே மகிழ்ந்துறைந்தானாக என்றபடி.

(598)