(இ - ள்.) இன்னவாறு - இவ்வகையாக; இளவேனில் - இளவேனிற் பருவம்; எதிர்கொள்ள - சுவலனசடி மன்னனை எதிர்கொண்டு வழிபாடு செய்ய; எழில் யானைமன் - அழகிய யானையையுடைய அரசர்கள்; அவாம் - விரும்புகின்ற; தனிச் செங்கோல் மறவேல் வையக வேந்தன் - ஒப்பற்ற நீதி தவறாத அரசாட்சியையும் வலிய வேற்படையையுமுடைய உலகத்தை யாளும் சுவலனசடி யரசன்; தன் அவாம் மடவாரை - தன்னை விரும்பும் பெண்கட்கு; தான் உவந்து பொழில்காட்டி - தான் மகிழ்ச்சியுடன் சோலை வளத்தைக் காண்பித்து; மின்அவாம் இடைநோவ - மின்னலும் விரும்பும்படியான இடை வருந்துமாறு; விளையாட அருளினான் - பொழில் விளையாடுதற்குக் கட்டளையிட்டான். (எ - று.) பொழிலையடைந்த அரசன் தன்னுடைய மனைவி முதலாயினோருக்குப் பொழில்களின் சிறப்புக்களைக் காட்டி அவர்களைப் பொழிலில் விளையாடச் செய்தான் என்க. மின்னவாம் இடை - மின்னல் போன்ற இடை யெனினுமாம். 'இடைநோவ விளையாட' என்றதனால் அம் மகளிரது மென்மையும் அழகும் தோன்றும், |