அப்பொழுது நிகழ்ந்த ஆரவாரம்

1734. வானிடை மணிவிளக் கெரிந்த வண்டொடு
தேனுடை மலர்மழை சிதர்ந்த தவ்வழி
மீனுடை விரிதிரை வெண்சங் கார்த்தன
தானுடை யொளிதிசை தவழ்ந்தெ ழுந்ததே.
      (இ - ள்.) வானிடை மணிவிளக்கு எரிந்த - வானிடத்தே மணிகளாகிய விளக்குகள்
ஒளிர்ந்தன, வண்டொடு தேனுடை மலர்மழை சிதர்ந்தது - வண்டுகளோடே தேன் மிக்க
மலர்மாரி பொழிந்தது, அவ்வழி - அப்போது, மீன்உடை விரிதிரை வெண்சங்கு ஆர்த்தன
- மீன்களை உடைய விரிந்த கடலிலே தோன்றிய வெளிய சங்குகள் முழங்கின, தானுடை
ஒளி திசை தவழ்ந்து எழுந்தது - அக்குழவியின் திருமேனி ஒளி திசைகளிலே பரவி
எழுந்தது, (எ - று.)

     அக்குழவி தோன்றிய பொழுது, வானிடத்தே மணிவிளக்கு எரிந்தன; மலர்மழை
பொழிந்தது; சங்குகள் முழங்கின;அக்குழவியின் திருமேனி ஒளி திசைகளிலேபரவிற்றென்க.
(604)