இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது

174. எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணிந்து வண்டூத வளர்கின்ற 3விளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே.
     (இ -ள்.) புரியணிந்த குழலீர் - நெறிப்பமைந்த கூந்தலையுடைய பெண்களே!; எரி
அணிந்த இளம்பிண்டி இணர் ஆர்ந்த இடம் எல்லாம் - தீயைப்போன்ற இளமையான
அசோகமரத்தின் தளிர்கள் நிறைந்த இடங்களெல்லாவற்றினும்; பொரி அணிந்த புன்கு பூ
உதிர்ந்து நாறும் துறை எல்லாம் - நெற்பொரியைப்போன்ற அழகினையுடையதாய்ப்
புன்கமரத்தின் மலர்கள் சிந்தி மணம் வீசப்பெறும் இடங்களிலெல்லாம்; வரி அணிந்து
வண்டு ஊத - இசைப்பாட்டோடு பொருந்தி வண்டுகள் ரீங்காரஞ்செய்ய; வளர்கின்ற
இளவேனில் - சிறப்புடையதாக விளங்குகின்ற இவ்விளவேனிற் பருவமானது; நும் செல்வம்
போல் பொலிந்தது - உங்களுடைய பெண்மை நலம்போலச் சிறப்புடையதாக
விளங்குகின்றது. (எ - று.)

     இளவேனிற் பருவம் உங்களுடைய இன்ப நலத்தைப்போல இன்பஞ்செய்து நிற்கின்ற
தென்பான் “நுஞ்செல்வம்போற் பொலிந்ததே“
என்றான். இணர் பூங்கொத்து எனினுமாம். புன்கின் பூக்களை நெற்பொரியோடு
நூலாசிரியர்கள் பலரும் ஒப்பிட்டுரைப்பர். அவ்வுவமை நயம் போற்றத்தக்கது. 'புரியணிந்த
குழலீர்' என்பதற்குப் பின்னியழகு செய்யப்பட்ட கூந்தலையுடையீர் என்றும் பொருள்
கூறலாம்.
 

( 56 )