விசயனுக்குக் கலை பயிற்றல்

1743. ஐயாண் டெல்லை யையனணைந்தா னவனோடு
மையா ரின்பக் காதலி நாவின் மகளாகப்
பொய்யாக் கல்விச் செல்வர்க டம்மாற் புணர்வித்தான்
நெய்யார் செவ்வே 1னீளொளி நேமிப் படையானே.
      (இ - ள்.) ஐயாண்டு எல்லை ஐயன் அணைந்தான் - ஐந்தாண்டு அகவையை
விசயன் எய்தினானாக, அவனோடும் - அவ்விசயனாகிய மணமகனோடே, ஐ ஆர் இன்பக்
காதலி - அழகுமிக்கு இன்புறுதற்குரிய மணமகள் ஆவாள், நாவின் மகள் ஆக - கலை
மகளே ஆமாறு, பொய்யாக் கல்விச் செல்வர்கள் தம்மால் - மெய்ந்நூற் கல்வியாகிய
செல்வத்தான் மிக்க நல்லாசிரியராலே, புணர்வித்தான் - மணம் புணர்த்தினான், நெய் ஆர்
செவ்வேல் நீள் ஒளி நேமிப்படையோன் - நெய் நீவிய செவ்விய வேற்படையினையும்,
நீண்ட ஒளியையுடைய ஆழிப்படையையும் உடைய திவிட்டநம்பி, (எ - று.)

     இவ்வாறு வளர்ந்த விசயன் ஐயாண்டகவையை எய்தியவுடன் அப்பருவத்தே மணம்
புணர்த்தற்குரிய நாமகளைப் பொய்யாக் கல்விச் செல்வர்களாலே விசயனுக்கு மணம்
புணர்வித்தான் என்க, என்றது, கலை பயிற்றுவித்தான் என்றபடி. இங்ஙனமே,
சிந்தாமணியினும், சீவக நம்பிக்குக் கலைபயிற்றுவித்தார் என்னும் செய்தியை,

     “மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன் மதலையை மயிலஞ் சாயல்
     குழைமுக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்க லுற்றார்Óஎன்றும்,

     “இருந்து பொன்னோலை செப்பின் ஊசியால் எழுதி ஏற்பத்
     திருந்துபொற் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தி னாரேÓஎன்றும்,

     “நாமகள் நலத்தையெல்லாம் நயந்துடன் பருகிÓ
     என்றும், அத்தேவரும் கூறுதல் காண்க.

(613)