(இ - ள்.) காமச்செல்வன் என்று - அழகினாலே மதவேளே இவன் என்று, உலகு எல்லாம் களி தூங்கும் - உலகினர்கள் எல்லாரும் மிக்கு மகிழும், ஏமச்செல்வ நம்பியொடு - இன்பமுடைய செல்வனாகிய விசய நம்பியோடே, இன்னும் பின்னரும், இளையாக - இளையளாக, சேமச் செல்வன் தேவி - அரசு காவலையே தன் செல்வமாகப் போற்றுகின்ற திவிட்டநம்பியின் முதற் பெருந்தேவியாகிய சுயம்பிரபை, திசையெல்லாம் - திக்குகள் தோறும், ஓமச் செல்வம் கொண்டு - யாகத்திற்குரிய பொருள்களைக் கொண்டு அவிசொரிந்து, இனிதேத்தும் - இனிதாகப் போற்றுகின்ற, ஒளியாள் பயந்தாள் - செந்தீயை ஒப்பாள், ஆகிய ஒரு பெண் மகவை ஈன்றாள், (எ - று.) விசயன் இவ்வாறு வளர்ந்து கலைபயிலும்போது சுயம்பிரபை ஒரு பெண் மகவை ஈன்றாள் என்க. ஏமச்செல்வம் - காத்தற் றொழிலாகிய அரசியற் செல்வம். ஓமச் செல்வம் - கொண்டு இனிதேத்தலாவது, வேள்வி முதலியனசெய்து இக்குழவியின் நன்மையைப் போற்றுதல் என்க. |