சோதிமாலை விளையாட்டாயம் அடைதல்

1749. செம்பொற் சிலம்புங் கிண்கிணியுஞ்
     2செல்வச் செஞ்சீ றடிபோற்ற
வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்த
     வல்குன் மணிமே கலை 3மருட்ட
அம்பொற் சுருளை யிருபாலு
     மளக வல்லி யருகிலங்கப்
பைம்பொற் சுடிகை நிழறுளங்கப்
     படர்ந்தா 4டாயம் படிந்தாளே.
      (இ - ள்) செம்பொன் சிலம்பும் கிண்கிணியும் - செவ்விய பொன்னாலியன்ற
சிலம்புகளும் கிண்கிணிகளும், செல்வச் செஞ் சீறடிபோற்ற - செல்வமிக்க செவ்விய தன்
சிற்றடிகளை வாழ்த்த, வம்பத்துகிலின் - புதிய பட்டாடையின்மிசை, வடம் சூழ்ந்த அல்குல்
- மணிவடங்களாலே சூழப்பட்ட இடையிலே, மணிமேகலை மருட்ட - மணிமேகலை அணி
வியப்பூட்டா நிற்ப, அம்பொற்சுருளை இருபாலும் - அழகிய பொன் சுருளைகள் அணிந்த
இரண்டு செவிகளின் பக்கங்களிலும், அளக வல்லி அருகிலங்க - கூந்தற் கொடிகள் படர்ந்து
அண்மையிலே திகழா நிற்ப, பைம்பொன் சுடிகை நிழல் துளங்க - பசும் பொன்னாலியன்ற
நெற்றிச்சுட்டி ஒளிர, படர்ந்து - சென்று ஆடு ஆயம் படிந்தாள் - விளையாடுகின்ற மகளிர்
குழாத்தை எய்தினாள், (எ - று.)

     சோதிமாலை சிலம்புங் கிண்கிணியும் சீறடி போற்றவும் மணிமேகலை மருட்டவும்,
அளகவல்லி இலங்கவும் சுடிகை துளங்கவும் ஆயம் படிந்தாள் என்க.

(619)