கைகளும் இடைகளும்

175. காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்
சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே
வாரணிந்த முலையீர்நும் 1மருங்குறனின் வகைநோக்கி
ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே.
 

     (இ - ள்.) கார் அணிந்த குழலீர்! - முகில்போன்ற கூந்தலையுடைய நங்கையீர்!; சீர்
அணிந்த செழும்பிண்டி - சிறப்புப் பொருந்திய செழித்த அசோகமரங்களானவை; நும் கைத்
தலங்கள் தகை நோக்கி - உங்களுடைய கைகளின் அழகைப் பார்த்து; தளிர் ஈன்று
திகழ்ந்தன - தாம் தளிர்களைவிட்டுத் திகழலாயின; வார் அணிந்த முலையீர்! -
கச்சணியப்பெற்ற கொங்கைகளையுடையீர்!; ஏர் அணிந்த குருக்கத்தி - அழகு பொருந்திய
குருக்கத்திக் கொடிகளானவை; நும் மருங்குல் தனின் வகை நோக்கி - உங்களுடைய
இடையின் அழகைப் பார்த்து; இளங்கொடித்தாய் ஈன்றன - இளங்கொடிகளை மேலும்
மேலும் பெறலாயின. (எ - று.)

     அரசன் தன்னுடைய காதன் மகளிரைப் பார்த்து, அசோகமரத்தின் தளிர்கள்
அவர்களுடைய கைகளைப்போல் இருக்கின்றன என்றும், குருக்கத்தியின் புத்திளங்
கொடிகள் அவர்களுடைய இடைகளைப்போல இருக்கின்றன என்றும் நலம்
பாராட்டுகின்றான். பிண்டியும் குருக்கத்தியும் அவர்களுடைய கைகளையும் இடைகளையும்
பார்த்து முறையே தளிர்களையும் புதுக் கொடிகளையும் ஈனுகின்றன என்னுஞ் சிறப்பால்
அம்மாதர்களின் பேரழகு தெள்ளிதிற் புலனாகும்.

( 57 )