இதுவுமது

1752. கரிய குழலும் பொற்றோடுஞ்
     செய்ய வாயுங் 3கதிர் முறுவல்
மரிய திசையு மதிமயங்கு
     4மம்பொன் முகத்து மடவார்கள்
திரியத் தம்மைப் புடைத்தாலுஞ்
     சென்று சேர்ந்து திளைக்குமால்
அரிய செய்யுங் காமுகர்போ
     லளிய வந்தோ வடங்காவே.
       (இ - ள்.) கரிய குழலும் - கரிய கூந்தலும், பொற்றோடும் - பொன்னாலியன்ற
தோடுகளும், செய்ய வாயும் - சிவந்த வாயும், கதிர்முறுவல் - ஒளியுடைய புன்முறுவலும்
உடைய, மதிமயங்கும் - திங்களைப்போன்ற, அம்பொன் முகத்து - அழகிய
பொன்னிறமமைந்த முகத்தையுடைய, மடவார்கள் - அம்மகளிர்கள், மரிய - பொருந்திய,
திசையும் திரிய - திசைகளிலே செல்ல, தம்மை புடைத்தாலும் - தம்மை அடித்தபோதும்,
சென்று சேர்ந்து திளைக்கும் - மீண்டும் சென்று எய்தி அம்மகளிரைப் பொருந்தா நிற்கும்,
அளிய - இரங்கத்தக்கன, அந்தோ - ஐயகோ, காமுகர் போல் அரிய செய்யும் -
காமுகர்களைப்போன்று செய்தற்கரிய செயல்களைச் செய்யும், அடங்கா - அடக்கம்
இல்லனவாய்,
(எ - று.)

     மடவார்கள் திசையிலே செல்லும்படி அப்பந்துகளைப் புடைக்கும் பொழுதும்
அவைகள் காமுகர் போன்று அம்மகளிரைச் சென்று தழுவா நிற்கும், தம்மை அகலப்
புடைக்கும் மகளிரை விரும்பும் அவை அளியவே என்றார் என்க.

(622)