(இ - ள்.) செம்பொன் சுருளை - செவ்விய பொன்னாலாய சுருளை என்னும் காதணியை, மெல் விரலால் திருத்தி - நழுவாதபடி தனது மெல்லிய விரலாலே நன்கு திருத்திக்கொண்டு, தேர் அல்குல் - தேர்த்தட்டை ஒத்த அல்குலிடத்தே, செறிந்த - பொருந்திய, வம்பத்துகிலின் - புதிய ஆடையின் மிசை வடம் சூழ்ந்து - மணிவடத்தை நன்கு விசித்து, மணிமேகலையும்தான் - மணிமேகலையையும், ஏற்றி - ஏறச்செறித்து, அம்பொன் குரும்பை மென்முலைமேல் - அழகிய பொற்றேமல் படர்ந்த தெங்கிளங் குரும்பை போன்ற மெல்லிய முலைகளின் மிசை, பொன்ஞாண் அருகு ஒடுக்கி - விசித்த பொற்சரட்டின் பக்கங்களை ஒடுக்கி, பைம்பொன் திலக நுதல் ஒதுக்கி - பசிய பொற்றிலதமிடப்பட்ட நெற்றியிலே சரிந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டு, பாவை - கொல்லிப்பாவை போன்ற சோதிமாலை, பந்து கைக்கொண்டாள் - ஆடுதற்குப் பந்தினைத் தன் கையிலே ஏந்தா நின்றாள், (எ - று.)சோதிமாலை ஆடத் தொடங்குபவள், சுருளைத் திருத்தி வடஞ்சூழ்ந்து மேகலை ஏற்றி ஞாண் ஒடுக்கி நுதலொதுக்கிப் பந்தினைக் கைக்கொண்டாள் என்க. வம்பத்துகில் - புதுமைமிக்க ஆடை. |