இதுவுமது | 1760. | இளமையா லெழுதரு மிணைமென் கொங்கையின் வளமையாற் பொலிதரும் வனப்பின் மாட்சியால் குளமையா னறவிரி குவளைக் கண்ணியான் 1உளமயா வு 2யிர்ப்பதோ ருவகை யெய்தினான். | (இ - ள்.) இளமையால் - சோதிமாலையின் இளமைப் பருவத்தானும், இணை மென் கொங்கையின் வளமையால் - இரண்டாகிய மென்மையுடைய முலைகளின் எழுச்சிவளத்தானும், பொலிதரும் வனப்பின் மாட்சியான் - விளங்கும் அழகினது பெருமையாலும், குளம் ஐயால் நற விரி குவளைக் கண்ணியான் - நெற்றியின் எழிலானும தேன் பிலிற்றும் குவளைமலர் மாலையையுடைய திவிட்டன், உளம் அயாவுயிர்ப்பதோர் உவகை யெய்தினான் - நெஞசம் தாங்காதே அயாவுயிர்த்தற்கு ஏதுவாகிய பெரியதொரு மகிழ்ச்சியுடையன் ஆனான், (எ - று.) அயா வுயிர்த்தல் - அளவிகந்த இன்பமாதல், துன்பமாதல் உளத்தை நிரப்பியபோது மனம் அதன்கண் அழுந்தித் தன்வய மிழந்த பின்னர் மீண்டும் ஒருவாறு தன்வயப்படுங்கால் ஒரு பெருமூச்செறிதல். குளம் - நெற்றி, நீர்நிலை முதலிய பலபொருள் தரும் ஒருசொல். குளமையால் - நீர்நிலையின் சிறப்பினாலே, நறவிரி - தேனை மிகுதியாகப் பொழியும் எனப் பொருள்கொண்டு திவிட்டனுக்கு அடையாக்கினும் அமையும். | (630) | | |
|
|