திவிட்டன் சூழ்ச்சிமன்றம் எய்துதல் | 1761. | செல்வியைத் திருக்குழ றிருத்தித் தேவிதன் அல்குன்மே லினிதினங் கிருவி யாயிடை மல்குபூ மந்திர சாலை மண்டபம் பில்குபூந் தெரியலான் 1பெயர்ந்து போயினான். | (இ - ள்.) செல்வியை - சோதிமாலையை, திருக்குழல் திருத்தி - அழகிய அளகத்தைத் தன்கைகளால் ஒப்பனை செய்து, தேவி தன் அல்குல் மேல் இனிதின் அங்கு இருவி ஆயிடை - சுயம்பிரபையின் மடிமேல் இனிதாக அவ்விடத்தே இருத்திய பின்னர், மல்கு பூ மந்திரசாலை மண்டபம் - மலர் மிக்க சூழ்ச்சி மண்டபத்திற்கு, பில்கு பூந் தெரியலான் -தேன் துளிக்கும் மலர்மாலை அணிந்த திவிட்டமன்னன், பெயர்ந்து போயினான் - எழுந்து சென்றான், (எ - று.) சோதிமாலையின் பருவமுதிர்ச்சியைக் கண்ட திவிட்டன் அமைச்சர்களைக் கலந்து சோதிமாலையின் திருமணத்தைப்பற்றி முடிவு செய்தற்கு அவ்விடத்தைவிட்டு அகலலாயினன் என்க. | (631) | | |
|
|