இதுவுமது

1772. கண்சுட ரிலங்குவேற் 1காள வண்ணனும்
வெண்சுட ரொளியவன் றானும் விஞ்சையர்
தண்சுடர்த் தமனிய வண்ணன் றன்னொடும்
மண்சுட ருறுப்பதோர் வகைய ராயினார
     (இ - ள்.) கண்சுடர் இலங்குவேற் காள வண்ணனும் - தன்னிடத்தே சுடர்விட்டு
விளங்குகின்ற வேற்படையுடைய நீல வண்ணனாகிய திவிட்டனும், வெண்சுடர் ஒளியவன
தானும் - வெளிதாய்ச் சுடரும் ஒளியையுடைய விசயனும், விஞ்சையர் தண்சுடர்த் தமனிய
வண்ணன் தன்னொடும் - விச்சாதரவேந்தனாகிய குளிர்ந்த ஒளியையுடைய
பொன்வண்ணனாகிய அருக்க கீர்த்தியும் ஒன்றுகூடி, மண்சுடர் உறுப்பதோர் வகையார்
ஆயினார் - இம் மண்ணுலகத்தையே ஒளிரச்செய்யும் ஒரு தன்மையுடையர் ஆனார்,
(எ - று.)

     விசயனும் திவிட்டனும் அருக்ககீர்த்தியுமாகி மூன்று மன்னர் மக்களும் மூன்று
சுடர்கள் உலகத்தை விளக்குவதைப் போன்று தம்முடல் ஒளியால் உலகை விளக்கினர்
என்க.

(642)