1776. | மீன்முக விசும்பிடை விரிந்த வெண்ணிலாப் பான்முகந் தொகுப்பன பனிக்கும் வேதிகை மேன்முகந் திருத்திய வெள்ளி முன்றிலான் 1நான்முக மருங்கினு நகுவ தொக்குமே. | (இ - ள்.) மீன்முக விசும்பிடை - உடுக்களையுடைய இடமிக்க விசும்பினிடத்தே தோன்றி, விரிந்த பால் வெண்ணிலா முகம் தொகுப்பு அன - விரிதலையுடைய பால் போலும் வெள்ளிய நிலாவொளியை ஒருமுகம்படத் திரட்டியது போன்று, பனிக்கும் வேதிகை- நீரைத் துளிக்கும் சந்திரகாந்தத் தாலாய மேடை, மேல்முகந் திருத்திய வெள்ளிமுன்றிலான் - தன்மேற் புறத்தே சீர் செய்யப்பட்ட வெள்ளித்தகடுகள் பதித்த முன்றிலிடத்தே நின்று, நான்முக மருங்கினும் நகுவது ஒக்கும் - நான்கு திசைகளினும் சிரிப்பதுபோற் றோன்றும், (எ - று.) நிலாவை தொகுத்து வைத்தது போன்று நீர்காலும் வேதிகை, முன்றிலிடத்தே நின்று நகுவது போலும் என்க. | (646) | | |
|
|