வேறு

அரசன் திருக்கோயிலை அடைதல்

178. இன்னண மிளையவர் மருள வீண்டுசீர்
மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக்
கன்னவில் புரிசையுட் 6கடவுட் காக்கிய
பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான்.
     (இ - ள்.) ஈண்டு சீர்மன்னவன் - நிறைந்த புகழையுடைய சுவலனசடியரசன்;
இன்னணம் - இவ்வாறு; இளையவர் மருள - தன்னுடைய மனைவியர் இன்பமயக்க
மடையும்படி; வயந்தம் ஆட்டு அருளி - இளவேனிற் காலத்துப் பொழில்
விளையாடுதலைப்புரிந்து, மாமணிக் கல்நவில் புரிசையுள் கடவுட்கு ஆக்கிய பொன்நவில்
திருநகர் - சிறந்த மணிக்கற்கள் பதித்துச் செய்யப்பட்ட மதிலினுள்ளே அருகக்கடவுட்கு
அமைக்கப்பெற்ற பொன்மயமான திருக்கோயிலை; பூவொடு எய்தினான் - மலருடனே
யடைந்தான். (எ - று.)

கடவுள் - அருகன். ஆட்டு - ஆடல். மணிக்கல் - மணியாகியகல். புரிசை - மதில். பூ -
மலர்ப்பலி.
 

( 60 )