1781. மஞ்சுடை மாளிகை மிடைம ணித்தலம்
பஞ்சுடைத் தவிசுகள் பரப்பிப் பூவடுத்
தஞ்சுட ரிடுபுகை 3யடர்ந்தெ ழுந்தரோ
வெஞ்சுடர்க் கடவுளை விருந்து செய்தவே.
 
     (இ - ள்.) மஞ்சுடை மாளிகை மணி மிடை தலம் - முகில் தவழுகின்ற மாளிகையின்
மணிகள் செறிந்த உள்ளிடம், பஞ்சுடைத் தவிசுகள் பரப்பி - பஞ்சாலியன்ற அணைகளைப்
பரப்பி, பூவடுத்து - மலர்கள் தூவி, அஞ்சுடர் இடுபுகை அடர்ந்து எழுந்து - அழகிய
நெருப்பின்கண் அகில் முதலியவற்றை இட்டெழீ இய மணப்புகையைச் செறியப் புகைத்து,
வெஞ்சுடர் கடவுளை வெவ்விய ஞாயிற்றுக் கடவுளை, விருந்து செய்தவே - பூசனை
செய்தனவாய், (எ - று.)

     தலம் பரப்பி அடுத்து எழீஇக் கடவுளை விருந்து செய்த என்க. கடவுளை விருந்து
செய்தலாவது, பூசனை செய்தல்.

(651)