அத்தினபுரத்தரசன் வருகை

1785. குழவியம் பரிதி போல்வான் குருகுலங் குளிரத் தோன்றி
அழுவநீர்ப் புரிசை வேலி யத்தின புரம தாள்வான்
முழவங்க ளிரண்டு செம்பொன் முளைக்கதிர்க் கனக வல்லி
தழுவிய தனைய தோளான் றன்னொளி தயங்கச் சார்ந்தான்.
     (இ - ள்.) குருகுலம் குளிரத் தோன்றி - குருகுலத்தின் கண் உலகம் மகிழும்படி
பிறந்து, குழவி அம் பரிதி போல்வான் - இளைய ஞாயிற்றுமண்டிலம் போன்று
திகழ்கின்றவனும், அழுவம் நீர் புரிசை வேலி - ஆழிய அகழியையும் மதில்களையும்
வேலியாகவுடைய, அத்தினபுரமது ஆள்வான் - அத்தினபுரத்தை ஆட்சி செய்பவனும், முழவங்கள் இரண்டு - இரண்டு மத்தளங்கள், செம்பொன் முளைக்கதிர்க் கனகவல்லி தழுவியது அனைய தோளான் - செவ்விய பொன்னிறமுடையதும் தோன்றுகின்ற சுடர்க்கற்றையுடையதும் ஆகிய கனகவல்லி யென்னும் கொடி தம்மைச் சுற்றிப் படர்ந்தவற்றைப் போன்ற தோள்களையுடையவனுமாகிய மன்னன், தன்னொளி தயங்கச் சார்ந்தான் - தனது ஒளி திகழும்படி வந்தான், (எ - று.)

     கனகவல்லி படர்ந்த முழவங்கள் கடகம் செறிந்த தோள்கட்கு உவமையாயின.

     அத்தினபுரத்து அரசன் தன்னொளி தயங்கச் சுயம்வர மண்டபம் சார்ந்தான் என்க
குருகுலம் ஐம்பெருங்குலத்துளொன்று.            

(655)