சூரியபுரத்துத் தோன்றல் வருகை

1788. சொரிமதுக் கலந்த சோலைச் சூரிய புரம தாளும்
அரிகுலத் தரசர் கோமா 1னவிர்மணி யாரந் தாங்கிப்
பொருமலைப் பகடு நுந்திப் புயலலைத் திருண்டு வீழ்ந்த
புரிமலர்க் குஞ்சி தாழப் பொன்னகர் புகழப் புக்கான்.
     (இ - ள்.) சொரிமது கலந்த சோலை - பொழிகின்ற தேன் விரவிய
பொழில்களையுடைய. சூரியபுரமது ஆளும் - சூரியபுரத்தை ஆளும் மரபினராகிய,
அரிகுலத்து அரசர் கோமான் - அரி குலத்துட்டோன்றிய மன்னர்மன்னன்,
அவிர்மணி யாரம் தாங்கி - விளங்குகின்ற மணிவட மணிந்தவனாய், பொருமலைப்
பகடு நுந்தி - போர்த்தொழில் புரியும் மலையை ஒத்த களிற்றி யானையை ஊர்ந்து, புயல்
அலைத்து இருண்டு வீழ்ந்த புரிமலர் குஞ்சி தாழ - முகிலைத் தோற்கச் செய்வதாய்
இருண்டு சரிந்த மலர் சூட்டப்பெற்ற தலைமயிர் தாழ்ந்து கிடப்ப, பொன்நகர் புகழப்
புக்கான் - அழகிய நகரம் புகழும்படி சயமர மண்டபத்தே புகுந்தான் ;
(எ - று.)

அரிகுலத்தே தோன்றிச் சூரியபுரத்தை ஆள்கின்ற அரசன் ஆரந்தாங்கிப் பகடுந்திக்
குஞ்சி தாழப் புகழப் புக்கான் என்க.

     அரிகுலம் ஐம்பெருங் குலத்துள் ஒன்று.

(658)