திருக்கதவம் திறத்தல்

179. உலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன்
குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை
வலமுறை வந்தனன் வரலு மாமணிக்
கலமுறை கதிர்நகைக் கபாடம் 1போழ்ந்ததே.
 

     (இ - ள்.) உலம் உறை தோளினான் - திரண்ட கல்லினை ஒத்த தோள்
களையுடையவனான அந்தச் சுவலனசடி மன்னன்; உவகை கூர்ந்தனன் - மகிழ்ச்சி
மிகுந்தவனாய்; குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை - தன் முன்னோர் முதலாக
வழிவழி வழிபாடு செய்யப்பெற்றுவரும் அருகக் கடவுளின் கோயிலை அடைந்து;
முறைவலம் வந்தனன் - முறைப்படி வலமாகச் சுற்றிவந்தான்; வரலும் - அவ்வாறு வலமாக
வந்த அளவில்;
மாமணி - சிறந்த மணிக்கற்கள் பதிக்கப்பெற்றதும்; கலம் உறை - அணிகலன்கள்
அமைக்கப்பெற்றதும்; கதிர்நகை - மிகுந்த ஒளியை யுடையதுமான; கபாடம் போழ்ந்தது-
அக்கோயிலின் கதவு திறந்தது. (எ - று.)

     இக்கோயில் அரச குடும்பத்தினருக்காகத் தனியே அமைக்கப்பட்டது. அரசன் வராத
காலங்களில் பெரும்பாலும் மூடப்பட்டேயிருக்கும். அரசன் வழிபாடு செய்து சென்றவுடன்
திருக்காப்பிட்டுவிடுவர். ஈண்டு அரசன் திருக்கோயிலுக்கு வந்துள்ளமையை அறிந்த
வழிபாட்டாளர்கள் வந்து கதவைத் திறந்தனர். வழிபாடு முடித்து வெளிப்பட்டவுடன் பூட்டித்
தாளிட்டு விடுதலை 135 ஆம் செய்யுளில் காண்க; கவாடம் என்னும் வடசொல் திரிந்தது.
போழ்ந்தவே என்னும் பாடத்திற்கு இரட்டைக்கதவுகளாக அமைக்கப்பட்டவை என்று
கொள்க.

( 61 )