(இ - ள்.) ஐம்பெருங் குலத்தராய அரசரும் - இக்குவாகு குலம் முதலிய ஐந்து பெருங்குலங்களுட் டோன்றியவராய அரசரும், பிறரும் - அவ்வரச ரல்லாத ஏனையோரும்,. கம்பு ஏறி களி நல் யானை கடற்படை புறத்ததாக - கட்டுந் தூணை முறிக்கும் மதக்களிப்புடைய நல்ல யானை முதலிய நால்வகைப்பட்ட கடல் போன்ற தத்தம் படைகளை நகர்ப்புறத்தே வைத்து, வம்பு எறி வளாகம் செம்பொன் மஞ்சங்கள் மலிரவேறி - மணங்கமழும் வட்ட வடிவினவாய ஆதனங்கள் திகழும்படி வீற்றிருந்து, வெம்பரி விளங்கும் தானை வேலவர் - வெவ்விய புரவிகளால் விளக்கமுறுகின்ற படையையுடைய அவ்வேந்தர்கள், விளங்குகின்றார் - திகழ்ந்தனர், (எ - று.)