அமிததேசன் வருகை

1791. திருந்திய திலதக் கண்ணித் தேவிளங் குமரன் போலும்
அருந்தகை யரச நம்பி யடுதிற 1லமித தேசன்
பரந்தபின் பசலை கூரப் பனிக்கதிர் வருவ தேபோல்
விரிந்தொளி சுடர வேந்தர் விளங்கொளி மழுங்கச் சென்றான்.
     (இ - ள்.) திருந்திய திலதம் கண்ணி - திருத்திப் புனையப்பட்ட உயரிய முடிமலர்
மாலையையுடைய, தேவிளங் குமரன் போலும் - கடவுளாகிய முருகனைப் போன்ற,
அருந்தகை அரச நம்பி - அரிய தகுதியையுடைய அரசனாகிய, அடுதிறல் அமிததேசன் -
வெல்லும் ஆற்றல்மிக்க அமிததேசன் என்பான், பரந்த பனி பசலைகூர - பரவிய
பனிப்படலம் நிறங்குன்றும்படி, பின்கதிர் வருவதே போல் - அதன் பின்னர்த் தாய் ஞாயிறு
தோன்றினாற்போல, விரிந்து ஒளிசுடர - ஒளிபரவித் திகழவும், வேந்தர் விளங்கு ஒளி
மழுங்கச் சென்றான் - மன்னர்கள் விளங்குதற்குக் காரணமான தம்மொளி மழுங்குமாறும்
செல்லலானான், (எ - று.)

     கடவுளாகிய முருகனை ஒத்த அரச நம்பி அமிததேசன் பனிப்படலம் பசலைபாய
ஞாயிறு தோன்றினாற் போலே, தன் ஒளிசுடர வேந்தர் ஒளி மழுங்கச் சென்றான் என்க.

(661)