இதுவுமது

1800. அணிதயங்கு சோபான வீதிவா
     யணங்கனையா ரடியீ டேத்த
மணிதயங்கு மாளிகைமேல் வாணிலா
     வளர்முன்றின் மருங்கு சூழ்ந்து,
கணிதயங்கு வினைநவின்ற 1கண்டத்துத்
     திரைமகளிர் கையி 2னீக்கத்,
துணிதயங்கு வேலரசர் மனந்துளங்கச்
     சுடர்ந்திலங்கித் தோன்றி னாளே.
     (இ - ள்.) அணிதயங்கு சோபான வீதிவாய் - அழகுற்றுத் திகழ்தலையுடைய
படிக்கட்டுகளின் வழியே, அணங்கு அனையார் - தெய்வமகளிர் போன்ற
உழைக்கலமகளிர்கள், அடியீடு ஏத்த - அவள் அடியிடுந்தோறும் இறைஞ்சிப் போற்றா
நிற்ப, மணிதயங்கு மாளிகைமேல் - மணிகள் சுடரும் மாளிகையின் மேலிடத்துள்ள, வாள்
நிலா வளர் முன்றின் - நிலவொளி மிகும் முற்றத்தே சென்று, மருங்குசூழ்ந்து - தன்
பக்கத்தே மொய்த்து, கணி தயங்கு வினைநவின்ற கண்டத்துத்திரை - நூல்வல்ல தொழிற்
புலவராலே திகழ்கின்ற வினைத்திற மமைய இயற்றப்பட்ட பல வண்ணத் திரைச்சீலயை,
மகளிர் கையின் நீக்க - மகளிர்கள் தம் கையாலே அகற்ற, துணி தயங்குவேல் அரசர்
மனந்துளங்க - துணிவுடைமை விளங்குதற்குக் காரணமான வேற்படையை உடைய
வேந்தர்களின் நெஞ்சம் கலங்க, சுடர்ந்து இலங்கித்  தோன்றினாள் - ஒளிவிட்டு 
விளங்கித் தோன்றா  நின்றாள்,  (எ - று.)

     கண்டத்திரை - பலவண்ணமுடைய திரைச்சீலை.

     சோதிமாலை சோபான வழியே அணங்கனையார் அடியீடேத்த மாளிகைமேல்
நிலாமுன்றில் சேர்ந்து கண்டத்திரையை மகளிர் நீக்க அரசர் மனந்துளங்கத் தோன்றினாள்
என்க.

(670)