இவன் இக்குவாகுலத்து இளங்கோ எனல் | 1802. | அங்கார வலர்கதிர மணிசுடரு மரியணைமே லமர்ந்து தோன்றித் 4தங்கார மணிநிழற்றுந் 5தடவரையா ரகலத்தான் றகர நாறும் கொங்கார வார்குழலார் குவிமுலைகண் முகம்பொருத குவவுத் தோளான் இங்காரு நிகரில்லா விக்குவா குலத்திறைவ னிருந்த கோவே. | (இ - ள்.) ஆங்கு அலர் கதிர ஆரமணி சுடரும் - அவ்விடத்தே விரிந்த ஒளியுடைய முத்துமாலை ஒளிவீசாநின்ற, அரியணைமேல் அமர்ந்து தோன்றி - சிம்மாசனத்தின் மேலே வீற்றிருந்து விளங்கி, நிழற்றும் மணி ஆரம் தங்கு தடவரை ஆர் அகலத்தான் - மிளிருகின்ற மணிவடம் கிடந்த பெரிய மலை போலும் மார்பையுடையவனும், தகரம் நாறும் வார்குழலார் - மயிர்ச்சாந்து கமழும் நீண்ட அளகத்தையுடைய மகளிர்களின், கொங்கு ஆர குவி முலை கண்முகம் பொருத - மணமுடைய சந்தனந் திமிர்ந்த குவிந்த முலைகளின் கண்ணையுடைய குவடுகள் உழுத, குவவுத்தோளான் - திரண்ட தோள்களையுடையனுமாய், இருந்த கோ - இருக்கின்ற வேந்தன், இங்கு யாரும் நிகர் இல்லா இக்குவா குலத்து இறைவன் - இவ்விடத்தே யாரும் தனக்கு ஒப்பாரிலாத இக்குவாகு மரபிற்றோன்றி மன்னன்காண்! (எ - று.) அங்கு அரியணைமேல் அமர்ந்து தோன்றி நிழற்றுந் தடவரை அகலத்தான், நிகரில்லா இக்குவா குலத்திறைவன் கோ என்றாள் என்க. | (672) | | |
|
|