இதுவுமது | 1807. | 1சூழிருந்திண் கடற்றானை யுடன்றுளங்கச் சுரர்கொணர்ந்து சொரிந்த மாரித் தாழிரும்பல் புயறாங்கிச் சரகூடஞ் சந்தித்த தகையோ னன்னோன் யாழிரங்கு மணிவண்டு மிலங்கிழையார் கருங்கண்ணு மருங்கு நீங்கா வீழிரும்பொற் சுடரார வரைமார்ப2 னிவன்சீர்யான் விளம்ப வேண்டா. | (இ - ள்.) சூழ் இரும்திண் கடல் தானை உடன் துளங்க - தம்மைச் சூழ்ந்து வந்த பெரிய திண்ணிய கடல் போன்ற படைகள் உடனே நடுங்குமாறு, சுரர்கொணர்ந்து சொரிந்த - வானவர்களாலே கொண்டு வந்து பொழியப்பட்ட, தாழ் இரும்பல் புயல் மாரி தாங்கி - தாழ்தலையுடைய பெரிய பலவாகிய முகில்களின் மழையைத் தாங்கும்படி, சரகூடம் சந்தித்த தகையோன் அன்னோன் - அம்புகளாலே மண்டபமமைத்த பெருமையுடைய அருச்சுனனை ஒத்தவனும், யாழ் இரங்கு மணி வண்டும் இலங்கு இழையார் கருங்கண்ணும் - யாழ் போன்று பாடும் நீலமணி போன்ற வண்டுகளும் திகழ்கின்ற அணிகலன்களையுடைய மகளிர்களின் கரிய கண்களும், மருங்கு நீங்கா - அயலிலே மொய்த்தலைத் தவிராத, வீழ் இரும் பொன் சுடர் ஆர வரைமார்பன் - விரும்புதற்குரிய பெரிய பொற்கலன்கள் ஒளிருகின்ற மணிவடம் பூண்ட மலையை ஒத்த மார்பையுடையோனுமாகிய, இவன் - இவ்விள மன்னனுடைய, சீர் - பெருமையை, யான் விளம்ப வேண்டா - (இப்பேருலகம் நன்கு அறிந்தனவேயாகலின்) யான் இனிக் கூறவேண்டாவன்றே, (எ - று.) தகையோன் - ஈண்டு அருச்சுனன். இவன் கடற்றானை துளங்கச் சுரர் சொரிந்த மழைப்புயல் தாங்கிச் சரகூடஞ் சந்தித்த அருச்சுனனை ஒத்தவன். வண்டும், மகளிர் கருங்கண்ணும் மருங்கு நீங்கா. இவன்சீர் யான் விளம்ப வேண்டா என்றாள், என்க. | (677) | | |
|
|