அரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல்

181. மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன்
கைம்முகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான்
வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன்
செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான்.
     (இ - ள்.) மெய் மயிர் எறிந்து - சுவலனசடியரசனானவன் உடம்பில் மயிர்
சிலிர்க்கப்பெற்று, ஒளிதுளும்பும் மேனியன் - ஒளிவிளங்கும் உடலையு டையவனாய்; கை
முகிழ் முடித்தடம் கதழச் சேர்த்தினான் - தாமரை யரும்பு போன்ற குவிந்த தனது
கைகளைத் தன் தலைமீது விரைவாகக் குவித்து; வெம்மை செய் வினைத்துகள்
விளியவென்றவன் - தீமையைச் செய்கின்ற இருவினைத் தூள்கள் பறந்தோடிக் கெடுமாறு
வென்றவனான அருகக் கடவுளது; செம்மலர்த் திருந்தடி - செந்தாமரை மலர் போன்ற
அழகிய அடிகளை; சீரின் ஏத்தினான் - சிறப்பாகப் போற்றினான். (எ - று.)

     உடம்பில் மயிர்க்கூச் செறிதலும், உடம்பின் இயற்கையொளி மிகுதலும்
அன்பினாலாகும் மெய்ப்பாடுகள். குவித்த கைகளை விரைவாகத் தலைமீது கொண்டான்
என்பது இரண்டாம் அடிக்குப் பொருள்.
 

( 63 )