காபுரத்து வேந்தன் | 1815. | மழைக்கரும்புங் கொடிமுல்லை மருங்கேற வரம்பணைந்து தடாவி நீண்ட கழைக்கரும்பு 1கண்ணீனுங் 2காபுரத்தார் கோமானிக் கதிர்வேற் காளை இழைக் 3கரும்பு மிளமுலையா யெரிகதிரோன் வழிமருக னிவனீ ரீர்ந்தண் தழைக்கரும்பின் முருகுயிர்க்குந் தாரகலஞ் சார்ந்தவர்க டவஞ்செய் தாரே. | (இ - ள்.) மழைக்கு அரும்பும் கொடிமுல்லை - கார்ப்பருவத்தே அரும்புதலையுடைய முல்லைக்கொடி, மருங்கு ஏற - தம்பக்கத்தே படர, வரம்பு அணைந்து - கழனிகளின் வரம்பிலே சேர்ந்து, தடாவி - வளைந்து, நீண்ட - நீண்டு வளர்ந்த, கழைக்கரும்பு - கோலாகிய கரும்புகள், கண் ஈனும் - கணுக்களிலே முத்துக்களை ஈனாநிற்கும், காபுரத்தார் கோமான் இக்கதிர் வேல்காளை - காபுரத்தாருடைய அரசனாவான் இந்த ஒளி வேலேந்திய காளைபோன்ற மன்னன், இழைக்கு அரும்பும் இளமுலையாய் -ஆடையினூடே முகிழ்த்த இளமையுடைய முலையையுடைய சோதிமாலாய், எரிகதிரோன் வழிமருகன் - சூரிய மரபில் பிறந்தவன், இவன் - இம்மன்னனுடைய, நீர் ஈர்ந்தண் தழைக் கரும்பின் முருகு உயிர்க்கும் தார் அகலம் - நீர்மையையுடைய ஈரம் பொருந்திய குளிர்ந்த தழைகள் மிக்க கரும்பெழுதப்பட்ட மணங்கமழ்கின்ற மலர்மாலையணிந்த மார்பிடத்தே, சார்ந்தவர்கள் தவம் செய்தாரே - பொருந்திய மகளிர்கள் பெரிய தவம் செய்தவரே ஆதல் வேண்டும், (எ - று.) கரும்பு - எழுதிய கரும்பு என்க. காபுரத்தார் கோமானாகிய இக்கதிர் வேற்காளை கதிரோன் வழி மருகன்; இவன் தாரகலம் சார்ந்தவர்கள் தவம் செய்தோரே, என்றாள் என்க. | (685) | | |
|
|