கலிங்கமன்னனும் மகதமன்னனும் | 1818. | காந்தளங்கட் கமழ்குலையாற் 1களிவண்டு களிறகற்றுங் கலிங்க நாடன், பூந்தளவங் கமழ்சாரற் பொன்னறைசூழ் தண்சிலம்ப னன்றே பொன்னே, ஏந்திளஞ்சிங் காதனத்தி னினிதிருந்த விளவரச னிப்பா லானோன், மாந்தளிர்கண் மருங்கணிந்த மணியருவிக் குன்றுடைய மகதைக் கோவே. | (இ - ள்.) கள் கமழ் காந்தளம் குலையால் - தேன்மணக்கும் காந்தளின் அழகிய பூங்கொத்தாலே, களிறு களிவண்டு அகற்றும் - யானைகள் தம்மேல் மொய்க்கின்ற களிப்பையுடைய வண்டுகளை ஓச்சா நிற்கும், கலிங்க நாடன் - கலிங்க நாட்டரசனும், பூந்தளவம் கமழ் சாரல் பொன்னறை சூழ் தண் சிலம்பன் - அழகிய முல்லை மணக்கும் தாழ்வரைகளையும் உச்சியினையும் உடைய குளிர்ந்த மலைகளை யுடையவனும் ஆவான், பொன்னே - திருமகள் போல்வாளே!, ஏந்திளம் சிங்காதனத்தின் இனிது இருந்த இளவரசன் - இளைய அரிமாச் சுமந்த அணையிடத்தே இனிதாக வீற்றிருந்த இவ்விள மன்னன், இப்பால் ஆனோன் - அம்மன்னனுக்கு இப்புறத்தே அமர்ந்திருக்கின்ற அரசன், மாந்தளிர்கள் மருங்கு அணிந்த - மாமரத்தினது தளிர்களை அணிந்துள்ள பக்கங்களையுடைய, மணியருவி - நீல மணி போன்ற நிறமுடைய அருவிகள் பாய்கின்ற, குன்று உடைய மகதைக் கோமான் - மலைகளையுடைய மகதநாட்டு மன்னன் ஆவான், (எ - று.) சிங்காதனத்தில் இனிதிருந்த இளவரசன் தளவங் கமழ்சாரால் சிலம்பன் கலிங்கநாடன் ஆவன், இப்பாலானோன் குன்றுடைய மகத மன்னன் என்றாள், என்க. | (688) | | |
|
|