வேறுபல மன்னர்கள்

1819. அங்கநா டுடையவர்கோ னவ்விருந்தா
     னிவ்விருந்தா னவந்திக் கோமான்,
கொங்குவார் பொழிலணிந்த கோசலத்தார்
     கோமானிக் குவளை வண்ணன்,
கங்கைதா னிருகரையுங் கதிர்மணியும்
     பசும்பொன்னுங் கலந்து சிந்தி
வங்கவாய்த் திரையலைக்கும் வளநாட
     2னிவன்போலும் வைவேற் காளை.
     (இ - ள்.) அவ் விருந்தான் - அவ்விடத்தே இருக்கின்றவன், அங்கநாடு உடையவர்
கோன் - அங்கநாட்டில் வாழுநர்க்கு வேந்தன், இவ் விருந்தான் - இவ்விடத்தே
இருக்கின்றவன், அவந்திக் கோமான் - அவந்தி நாட்டு அரசன், இக்குவளை வண்ணன் -
இந்தச் செங்கழுநீர் மலர்போன்ற நிறமுடையோன், கொங்குவார் பொழில் அணிந்த
கோசலத்தார் கோமான் - மணங்கமழும் நீளிய பூம்பொழில்களைப் பூண்டுள்ள கோசல
நாட்டினர் மன்னன், வைவேற் காளையிவன் - கூரிய வேலேந்திய காளைபோன்ற இவன்,
கங்கைதான் இருகரையும் - கங்கைப் பேரியாறு தன் இரண்டு கரைகளிடத்தேயும்,
கதிர்மணியும் பசும் பொன்னும் கலந்து சிந்தி - ஒளியுடைய மணிளையும் பசிய
பொன்துகள்களையும் விரவிச் சிதறி, வங்வாய்த் திரை அலைக்கும் - மரக்கலங்கயைுடைய
கடலை வருத்துகின்ற வள நாடன் - வளமுடைய நாட்டின் மன்னர் ஆவான், (எ - று.)

     இவ்விடத்திருந்தான் அங்கநாட்டரசன்; அவ்விடத்திருந்தான் அவந்திமன்னன்;
இக்குவளை வண்ணன் கோசலத்தார் கோமான்; இவன் கங்கை சிந்தித் திரையலைக்கும்
வளநாடன் என்றாள், என்க.

(689)