வேறு
வரிப்பாட்டு

எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்

182. அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும்
அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே.
 

     (இ - ள்.) அணியாதும் - யாதோர் அணிகலனையும் அணிந்துகொள்ளாமலிருந்தும்;
ஒளிதிகழும் - இயற்கையொளி விளங்கப்பெறும்; அணங்கு ஆர் திருமூர்த்தி - அழகு
நிறைந்த சிறந்த வடிவத்தை யுடையவனே!; கணியாது முழுதுணர்ந்த கடவுள் என்று
அறையும் - இயல்பாகவே எல்லாவற்றையும் அறிந்த கடவுள் என்று நூல்கள்
உன்னைக்கூறா நிற்கும்; கணியாது முழுது உணர்ந்த கடவுள் என்று அறைந்தாலும் -
அவ்வாறு இயல்பாகவே எல்லாவற்றையும் அறிந்த கடவுள் என்று நூல்கள் உன்னைக்
கூறினாலும்; அணிஞாலம் உடையாயை - அழகிய உலகங்கள் எல்லாவற்றையும்
உரிமையாகவுடைய நின்னை; அறிவாரோ அரியர் - உள்ளபடியாக வுணர்பவரோ
உலகத்தில் மிகவும் அருமையானவராவர். (எ - று.)

இயற்கையொளியும் இயற்கையழகும் உடைய கடவுள் என்பார். “அணியாதும்
ஒளிதிகழும் ஆரணங்கு திருமூர்த்தி“ என்றார். திகம்பரிகளென்றும் சுவேதாம்பரிகள்
என்றுங் கூறப்படுகிற சைனசமய வகுப்பினர் இருவருள், திகம்பரிகள் தமது கடவுளுக்கு
ஆடையணிகளை அணிவதில்லை. அநந்த ஞாநம் எனப்பெறும் வரம்பிலா அறிவினால்
இயற்கையாகவே எல்லாப் பொருள்களையும் அறிந்த முழுமுதற் கடவுள் என்று பல நூல்கள்
உன்னைக் கூறுகின்றன; அவ்வாறு கூறினாலும் உலகம் முழுவதையும் தனக்கு
உரிமையாகவுடைய நின்னை அறியக் கூடியவர் ஒருவரும் இல்லை யென்றான்.

(64)