இதுவுமது

1829. விண்ணகம் புகழு நீர்மை
     விழுக்கலம் பரப்பி யார
மண்ணக வளாகத் துள்ள
     மன்னரான் மண்ணு நீர்தந்
தெண்ணகன் புகழி னாரை
     யெழிலொளி துளும்ப வாட்டிப்
புண்ணகங் கமழும் வேலான்
     பொன்மழை பொழிவித் தானே.
     (இ - ள்.) விண்ணகம் புகழும் நீர்மை விழுக்கலம் பரப்பி - அமரரும் புகழ்தற்குரிய
நீர்மையுடைய சிறந்த கலங்களைப் பரப்பி வைத்து, ஆர - அவை நிறையுமாறு, மண்ணக
வளாகத்துள்ள - உலகில் உள்ள, மன்னரால் - அரசர்களாலே, மண்ணு நீர் தந்து -
ஆடுதற்குரிய கடவுட்டன்மையுடைய நீர் கொணர்வித்து, எண் அகன் புகழினாரை -
எண்ணம் விரிதற்கு ஏதுவாய் நீண்ட புகழுடைய அமித தேசன் சோதி மாலையாகிய
இருவரையும், எழில் ஒளி துளும்ப ஆட்டி - அழகு மிளிர நீராட்டி, புண் அகம் கமழும்
வேலான் - அகத்தே ஊன் கமழ்தலையுடைய வேற்படை ஏந்திய திவிட்ட மன்னன், பொன்
மழை பொழிவித்தானே - பொன்மாரி இரவலர்க்குப் பொழியச் செய்தான், (எ - று.)

     விழுக்கலம் - பொன் முதலியவற்றாலாய கலங்கள். மண்ணும் - குளிக்கும்.
விழுக்கலம் பரப்பி, ஆர மன்னரால் மண்ணும் நீர் தந்து, புகழினாரை ஒளி துளும்ப
ஆட்டி, வேலான் பொன் மழை பொழிவித்தான் என்க.

(699)