இதுவுமது

1830. தருமணன் மணிமுத் தாகத்
     1தண்டுல மியற்றிக் 2கான்யா
றருமணற் றருப்பை சூழ்ந்தாங்
     கதன்மிசை பரிதி பாய்த்திப்
பெருமண மன்னற் கேற்ற
     சமிதையாற் பெருக்கப் பட்ட
திருமணி யுருவச் செந்தீ
     செல்வத்திற் சிறந்த தன்றே.
     (இ - ள்.) தருமுத்து மணி மணலாக - பரதவராற் றரப்படும் முத்துக்களாகிய
மணிகளையே மணலாகப் பரப்பி, தண்டுலம் இயற்றி - அரிசியைப்பரப்பி, கான் யாற்று அரு
மணல் தருப்பை சூழ்ந்து - காட்டியாற்றின் கரைகளிலே அரிய மணற்பாங்கிலே முளைத்துச்
செழித்த தருப்பைப் புற்களையும் பரப்பி, அதன் மிசைப் பரிதிபாய்த்தி - அதன்மேல்
ஓமத்தீயை யிட்டு, பெருமணம் மன்னற்கேற்ற - பெரிய திருமணச் சடங்கினை அரசற்கென
நூல் கூறிய முறையே, சமிதையாற் பெருக்கப்பட்ட - பலாசம் முதலியவற்றின் சுள்ளிகளாலே
மிகுதியாக வளர்க்கப்பட்ட, திருமணி உருவச்செந்தீ - சிறந்த மணிபோன்ற உருவமுடைய
செவ்விய வேள்வித்தீ, செல்வத்திற் சிறந்தது - தனக்குரிய எல்லா நலனும் பெற்றுச் சிறந்து
விளங்குவதாயிற்று, (எ - று.)

     ஆக இயற்றிச் சூழ்ந்து, பாய்த்தி, சமிதையாற் பெருக்கப்பட்ட செந்தீ செல்வத்திற்
சிறந்ததென்க.

     சமிதை - ஆல் முதலியவற்றின் சுள்ளிகள். பரீதி - யாகமேடை. தண்டுலம் - அரிசி.

(700)