ஒருமறுவுமற்றநின்னை எல்லோரும் உணரார் என்றது

184.

திருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும்
அருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே.
 

     (இ - ள்.) திருமறுவு வலன் அணிந்து - சீவத்சம் என்னும் மறுவை
வலத்திருமார்பிலே அழகியதாகக்கொண்டு; திகழ்கின்ற திருமூர்த்தி - விளங் குகின்ற
அழகிய வடிவத்தையுடையவனே!; ஒருமறுவும் இலை என்பது ஒழியாமல் உணர்த்தும் -
உனக்கு யாதொரு மறுவும் இல்லையென்பதை நூல்கள் தவறாமற் புலப்படுத்தும்; ஒருமறுவும்
இலை என்பது ஒழியாமல் உணர்த்துகினும் - ஒருமறுவும் இல்லையென்பதை நூல்கள்
தவறாமற் புலப் படுத்தினாலும்; அருமறையை விரித்தாயை - அருமையான மறைகளை
விரித் துரைத்த நின்னை; அறிவாரோ அரியர் - உள்ளபடியாக உணர்பவரோ உலகத்திலே
மிகவும் அருமையானவராவர். (எ - று.)

பத்மம், சங்கம், மத்ஸ்யம், ஸ்ரீ வத்ஸம், ஸ்வஸ்திகம், நந்தியா வர்த்தம் முதலிய இரேகைகள்
நூற்றெட்டும், மசூரிகை முதலிய அடையாளங்கள் தொள்ளாயிரமும் ஆக மறுக்கள்
ஆயிரத்தெட்டு என்று சைனநூல்கள் கூறும். இவ்வாறு மறுவையணிந்து விளங்கும்
திருமேனியை உடையவனான உனக்கு மறுவொன்றும் [குற்றம் ஒன்றும்] இல்லையென்று
நூல்கள் கூறும் என்ற நயம் காண்க. உனது வடிவத்தை நூல்கள் தவறாமற் பல விடங்களில்
தெரிவித் தாலும் அருமறையை விரித்துரைத்தவனாகிய நின்னை உணரக்கூடியவர்களோ
ஒருவரும் இல்லையென்றபடி.

( 66 )