தோற்றுவாய்

1840. மன்னிய புகழி னான்றன்
     மகன்வழிச் சிறுவர் 1வாயின்
இன்னகை மழலை கேட்டாங்
     கினிதினி 2னிருந்து பின்னர்ப்
3பன்னுமெய்த் துறவிற் புக்கான்
     பயாபதி மன்னர் மன்னன்
4அன்னதன் பகுதி தன்னை
     யறியுமா பகர்த லுற்றேன்.
     (இ - ள்.) மன்னிய புகழினான் - நிலை நின்ற பெரும் புகழ் படைத்தவனாகிய,
பயாபதி - பயாபதி என்னும், மன்னர் மன்னன் - அரசர்கட்கு அரசன், தன் மகன் வழிச்
சிறுவர் வாயின் - தன் மகனாகிய திவிட்டனுடைய மரபிற் றோன்றிய மக்களினுடைய,
இன்நகை மழலைகேட்டு - இனிய நகைப்புடன் கூடிய மழலைச் சொற்களைச் செவிமடுத்து, இனிதினின் இருந்து - இனிதாக மகிழ்ந்து நெடிது நாளிருந்து, பின்னர் - பிறகு, பன்னும் மெய்த்துறவில் புக்கான் - மெய்ந் நூல்களால் ஆராய்ந்து கூறப்பட்ட மெய்யுணர்தற்குக் காரணமான துறவு நெறியிலே செல்வானாயினான், அன்னதன் பகுதி தன்னை - அவ் வரலாற்றின் பகுதியை, அறியுமா பகர்தலுற்றேன் - யான் அறிந்த துணையானே கூறத் தொடங்குகின்றேன், (எ - று.)

     நிலைபெற்ற புகழ் உடையான் என்றதனால் பயாபதி இல்லறத்தின் பயன் முழுதும்
பெற்றவன் என்றாராயிற்று. என்னை? இல்லறத்தின் பயன் புகழும் துறவறத்தின் பயன்
வீடுபேறும் என்பவாகலின். மகன் வழிச் சிறுவர் வாயில் இன்னகை மழலை
கேட்டென்றதனால், காமஞ்சான்ற கடைக்கோட் காலையை அடைந்தான் என்றாராயிற்று.
பின்னர்ச் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல்காப்பியம்) என நூல் பன்னு மாகலின் பன்னும் மெய்த்துறவென்றார். மன்னர் மன்னன் - என்றார், அரிய துறவு என்றுணர்த்தற்கு.

     பயாபதி துறவிற் புக்க பகுதியை இனிக் கூறப்புகுந்தேன் எனத் தேவர் நுதலிப்புக்கார் என்க.

(710)